3407. விளிதரு நீருமண்ணும் விசும் போடனல்
       காலுமாகி
அளிதரு பேரருளா னர னாகிய
     வாதிமூர்த்தி
களிதரு வண்டு பண்செய் கமழ் கொன்றையி      னோடணிந்த
ஒளிதரு வெண்பிறையா னுறை யும்மிட
     மொற்றியூரே.                      3

     3. பொ-ரை: ஓசையுடன் பாயும் நீர், நிலம், ஆகாயம்,
நெருப்பு, காற்றுமாகி, மன்னுயிர்களைக் காக்கும்
பெருங்கருணையாளன் ஆகிய சங்கார கர்த்தாவாகிய சிவபெருமானே
உலகத்தோற்றத்திற்கும் நிமித்தகாரணனாவான். மலர்களிலுள்ள
தேனைப்பருகிய மகிழ்ச்சியில் வண்டுகள் பண்ணிசைக்கும் நறுமணம்
கமழும் கொன்றை மாலையோடு ஒளிரும் வெண்பிறைச்
சந்திரனையும் சடையில் அணிந்த அச்சிவபெருமான்
வீற்றிருந்தருளுவது திருவொற்றியூர் என்னும் திருத்தலமாகும்.

     கு-ரை: விளிதருநீர் - பிரளயகாலத்து உலகை அழிக்க வல்ல
தண்ணீர். அளிதரு - (உயிர்களைக்) காக்கின்ற. பேர் அருளான் -
பெருங்கருணையுடையவன், அரன் ஆகிய - சங்காரகர்த்தாவும்
ஆகிய ஆதிமூர்த்தி. எவன் சங்கார கர்த்தாவோ அவனே
முழுமுதற்கடவுள் என்னும் உண்மை நூற்கருத்துப்பற்றி இங்ஙனம்
கூறினார்.