3419. மற்றவின் மால்வரையா மதி லெய்துவெண்
       ணீறுபூசிப்
புற்றர வல்குலாளோ டுட னாவதும்
     பொற்பதுவே
கற்றவர் சாத்தமங்கை நகர் கைதொழச்
     செய்தபாவம்
அற்றவர் நாளுமேத்த வய வந்தி
     யமர்ந்தவனே.                     4

     4. பொ-ரை: பெரிய மேருமலையை வில்லாகக் கொண்டு
மும்மதில்களை எய்து அழித்து, திருவெண்ணீற்றினைப் பூசி, புற்றில்
வாழ்கின்ற பாம்பு போன்ற அல்குலையுடைய உமாதேவியை
உடனாகக் கொண்டு விளங்குகிறான் சிவபெருமான். வேதகாமங்களை
நன்கு கற்றவர்கள் வாழ்கின்ற திருச்சாத்தமங்கை என்னும்
திருத்தலத்தைக் கைக்கூப்பித் தொழப் பாவம் நீங்கும். உலகப்
பற்றற்ற மெய்யடியார்கள், தமக்குப் பற்றுக் கோடாக விளங்கும் சிவ
பெருமானை நாள்தோறும் போற்றி வழிபட திருஅயவந்தி என்னும்
திருக்கோயிலில் அவன் வீற்றிருந்தருளுகின்றான்.

     கு-ரை: மற்ற - (எதிரிகள் வில்லுக்கு) எதிராகிய வில் மால்
வரையா(க) பெரிய (மேரு) மலையாக. பொற்பதுவே - அழகு
உடையதா?. கற்றவர் சாத்தமங்கை - கற்றவர் வாழும் திருச்சாத்த
மங்கையில். அற்றவர் - பற்றற்ற மெய்யடியார் “அற்றவர்க் கற்ற
சிவனுறைகின்ற ஆலவாய் ஆவதும் இதுவே” என்புழியும்
(தி.3.ப.120.பா.2.) காண்க.