3420. வெந்தவெண் ணீறுபூசி விடை யேறிய
       வேதகீதன்
பந்தண வும்விரலா ளுட னாவதும்
     பாங்கதுவே
சந்தமா றங்கம்வேதந் தரித் தார்தொழுஞ்
     சாத்தமங்கை
அந்தமா யாதியாகி யய வந்தி
     யமர்ந்தவனே.                      5

     5. பொ-ரை: இறைவன் திருவெண்ணீற்றினைப் பூசியவன்.
இடபவாகனத்தில் ஏறியமர்பவன். வேதத்தை இசையோடு பாடியருளி,
வேதப் பொருளாகவும் விளங்குபவன். பந்து வந்தணைகின்ற
விரல்களையுடைய உமாதேவியை உடனாகக் கொண்டவன்.
வேதமும், அதன் ஆறங்கமும் ஓதுகின்ற அந்தணர்கள் தொழுகின்ற
திருச்சாத்தமங்கை என்னும் திருத்தலத்தில் உலகத்திற்கு அந்தமும்,
ஆதியுமாகிய சிவபெருமான் திருஅயவந்தி என்னும் கோயிலில்
வீற்றிருந்தருளுகின்றான்.

     கு-ரை: வேதகீதன் - வேதத்தை இசையோடு பாடுபவன்.
சந்தம் - அழகிய. ஆறு அங்கம் - ஆறு அங்கங்களையும். வேதம்
- வேதத்தையும். தரித்தார் - உச்சரிப்பவர்களாகிய அந்தணர்கள்.
“உன் திருநாமம் தரிப்பார்” (திருவாசகம் - கோயிலின் மூத்த. 9)
என்பதும் காண்க.