3422. இமயமெல் லாமிரிய மதி லெய்துவெண்
       ணீறுபூசி
உமையையொர் பாகம்வைத்த நிலை தானுன்ன
     லாவதொன்றே
சமயமா றங்கம்வேதந் தரித் தார்தொழுஞ்
     சாத்தமங்கை
அமையவே றோங்குசீரா னய வந்தி
     யமர்ந்தவனே.                    7

    7. பொ-ரை: சிவபெருமான் இமயம் முதலான பெரிய
மலைகளும் நிலைகலங்குமாறு, முப்புரங்களை எரித்து,
திருவெண்ணீற்றினைப் பூசி உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு
பாகமாக வைத்த தன்மை பாராட்டிப் பேசக் கூடிய அரிய
செயலாகும். அவன் சமயநூல்களையும், வேதத்தையும்,
அதன் அங்கங்களையும் ஓதுகின்ற அந்தணர்கள் தொழுகின்ற
திருச்சாத்தமங்கை என்னும் திருத்தலத்தில் சிறப்புடன் ஓங்கித்
திருஅயவந்தி என்னும் கோயிலில் வீற்றிருந்தருளுகின்றான்.

     கு-ரை: இமயம் எல்லாம் - இமயம் முதலிய மலைகளெல்லாம்.
இரிய - (அதிர்ச்சியால்) நிலை பெயர, மதில் எய்து, உன்னலாவது.
ஒன்றே - பாராட்டி நினைக்கக் கூடியது ஒன்றா? சமயம் - சமய
நூல்களையும். அமைய - இடமாகப் பொருந்த. வேறு ஓங்குசீரான்
- பிறிதொன்றற்கு இல்லாத மிக்கசிறப்புடன்.