3425. கங்கையோர் வார்சடைமே லடை யப்புடை
       யேகமழும்
மங்கையோ டொன்றிநின்றம் மதிதான்சொல்ல
     லாவதொன்றே
சங்கையில் லாமறையோ ரவர் தாந்தொழு
     சாத்தமங்கை
அங்கையிற் சென்னிவைத்தா யயவந்தி
     யமர்ந்தவனே.                     10

     10. பொ-ரை: சிவபெருமான் கங்கையை நீண்ட சடைமுடியில்
தாங்கி, பக்கத்தில் உமாதேவியோடு ஒன்றி நின்ற அறிவுடைமை
சொல்லக் கூடிய தொன்றா? அவன் ஐயமில்லாமல் வேதங்களைக்
கற்றஅந்தணர்கள் தொழுகின்ற திருசாத்தமங்கை என்னும்
திருத்தலத்தில் உள்ளங்கையில் பிரமகபாலம் ஏந்தித் திருஅயவந்தி
என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றான்.

     கு-ரை: கங்காதேவி ஓர் வார்சடையின் பால், அடைய, புடை
- (உடம்பின்) ஒருபக்கல். மணம் புரிந்து கொண்ட உமாதேவியோடு
ஓருடம்பாகி நின்ற அறிவுடைமை - புகழ்ந்து சொல்லக் கூடிய
தொன்றா? கமழ்தல் - மணத்தல், அச்சொல்லால் அறியக்கூடிய
மற்றொரு பொருள் விவாகம் செய்து கோடலுக்கு ஆகியது. இலட்சித
இலட்சனை.