3426. மறையினார் மல்குகாழித் தமிழ் ஞானசம்
       பந்தன்மன்னும்
நிறையினார் நீலநக்க னெடு மாநக
     ரென்றுதொண்டர்
அறையுமூர் சாத்தமங்கை யய வந்திமே
     லாய்ந்தபத்தும்
முறைமையா லேத்தவல்லா ரிமை யோரிலு
     முந்துவரே.                       11

     11. பொ-ரை: நான்மறைவல்ல அந்தணர்கள் வாழ்கின்ற
சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன், மனத்தைப் புறவழியோடாது
நிறுத்தி, திருநீலநக்கருடைய நெடுமா நகர் என்று தொண்டர்களால்
போற்றப்படும் திருசாத்தமங்கை என்னும் திருத்தலத்திலுள்ள
திருஅயவந்தி என்னும் திருக்கோயிலைப் போற்றி அருளிய
இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள் தேவர்களைவிட
மேலானவர்கள் ஆவர்.

     கு-ரை: நிறை - மனத்தைத் தன்வழியோடாது நிறுத்தல்.
இமையோரிலும் முந்துவர் - “யான் எனது என்னுஞ் செருக்கு
அறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும்”. (குறள். 346)

     எட்டாம் திருப்பாடலில் வரும் இராவணன் செயல் ஒன்பதாம்
திருப்பாடலில் அயன் செயலோடு கூறப்பட்டுள்ளது. இரண்டாம்
திருப்பாடலிலும், திருக்கடைக்காப்பிலும் இத்தலத்தில் வாழ்ந்து வந்த
திருநீலநக்க நாயனாரைப்பற்றிக் கூறப்படுகிறது.