3427. அரவிரி கோடனீட லணி காவிரி
       யாற்றயலே
மரவிரி போதுமௌவன் மண மல்லிகை
      கள்ளவிழும்
குரவிரி சோலைசூழ்ந்த சூழ கன்குட
     மூக்கிடமா
இரவிரி திங்கள்சூடி யிருந் தானவ
     னெம்மிறையே.                       1

     1. பொ-ரை: பாம்பைப் போலும் தண்டோடு மலர் விரிந்த
காந்தட் செடிகள் செழித்திருத்தலால், அழகிய காவிரியாற்றின்
பக்கம், மராமரங்கள் விரிந்த மலர்களும், முல்லையும், மணம் வீசும்
மல்லிகையும், தேனோடு முறுக்கு உடையும் மலர்களைஉடைய
குராமரங்களும் விரிந்த சோலை சூழ்ந்த கும்பகோணத்தினை
இடமாகக் கொண்டு குழகனாகிய சிவபெருமான், இரவில்
ஒளிரும் சந்திரனைச் சூடி வீற்றிருக்கிறான். அப்பெருமானே எம்
இறைவன்.

     கு-ரை: அரவி கோடல்நீடல் - பாம்பைப்போலும், தண்டோடு
மலர் விரிந்த காந்தட் செடிகள் செழித்திருத்தலால், அணி - அழகு
செய்கின்ற. அயலே - காவிரியாற்றின் அருகில். மர - மராமரங்கள்.
விரி - விரிந்த. போது - மலர்களும். மௌவல் - முல்லையும். மண
மல்லிகை - மணத்தையுடைய மல்லிகையும். கள் அவிழும் -
தேனோடும் முறுக்கு உடையும். குர - குராமரங்கள். விரி - விரிந்த.
சோலைசூழ், குடமூக்கு - கும்பகோணம். இடம் ஆ - இடம் ஆக.
இரவு - இரவில். விரி -பரப்புகின்ற. திங்கள், குழகன், காவி யாற்று
அயலே குடமூக்கு இடமாக இருந்தான் அவனே எம் இறை யாவான்
என்க. நீடல் மூன்றன் உருபுத்தொகை. இத்திருப்பாடலின்
நான்கடியினும் முதலசைகளாகிய, அரா, மரா, குரா, இரா -
இந்நான்கும் கடைகுறுகி வந்தன. காந்தள் தண்டு பாம்பின்
உருவிற்கும் அதன் பூவிரிதல் - படத்திற்கும் உவமை.