3431. வடிவுடை வாட்டடங்கண் ணுமை யஞ்சவோர்
       வாரணத்தைப்
பொடியணி மேனிமூட வுரி கொண்டவன்
     புன்சடையான்
கொடிநெடு மாடமோங்குங் குழ கன்குட
     மூக்கிடமா
இடிபடு வானமேத்த விருந் தானவ
     னெம்மிறையே.     5

     5. பொ-ரை: அழகிய உருவமுடைய வாள்போன்ற ஒளி
பொருந்திய அகன்ற கண்களையுடைய உமாதேவி அஞ்சுமாறு
யானையின் தோலை உரித்து, திருவெண்ணீறணிந்த திருமேனிமீது
போர்த்தவனும், சடைமுடியுடையவனும், அழகனும் ஆன
சிவபெருமான், கொடிகள் அசைகின்ற ஆகாயத்தைத் தொடும்படி
ஓங்கி வளர்ந்துள்ள நீண்ட மாடங்கள் நிறைந்த திருக்குடமூக்கு
என்னும் திருத்தலத்தில் வானவர்கள் போற்ற வீற்றிருந்
தருளுகின்றான். அப்பெருமானே யாம் வணங்கும் கடவுளாவான்.

     கு-ரை: வடிவு உடை - அழகிய உருவமுடைய. வாரணம்
- யானையை. உரிகொண்டவன் - உரித்தவன். இடிபடு -
இடியையுடைய. வானம் - வானுலகில் உள்ளவர்களும். ஏத்த
இருந்தான்.

     மேக மண்டலம் வானிற் காணப்படுதலால் அதன்
கண்படும் இடியை, வானத்தின் மீது ஏற்றப்பட்டது. இடத்து
நிகழ்பொருளின் தொழில் இடத்தின் மேல் ஏற்றப்பட்டது.