3438. கறையணி மாமிடற்றான் கரி காடரங்
        காவுடையான்
பிறையணி கொன்றையினா னொரு பாகமும்
     பெண்ணமர்ந்தான்
மறையவன் றன்றலையிற் பலி கொள்பவன்
     வக்கரையில்
உறைபவ னெங்கள்பிரா னொலி யார்கழ
     லுள்குதுமே.                     1

     1. பொ-ரை: இறைவன் நஞ்சுண்ட கறுத்த கண்டத்தை
உடையவன். சுடுகாட்டில் திருநடனம் செய்பவன். பிறைச்
சந்திரனையும், கொன்றைமாலையையும் அணிந்தவன். உமாதேவியைத்
தன்திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவன். பிரமன் தலையைக்
கொய்து அதன் ஓட்டில் பிச்சை ஏற்பவன். திருவக்கரை என்னும்
திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற எங்கள் தலைவனான
சிவபெருமானின் ஒலிக்கின்ற வீரக்கழலணிந்த திருவடிகளைத்
தியானிப்பீர்களாக.

     கு-ரை: கரிகாடு - (கொள்ளிகள்) கரிந்தகாடு. அரங்கு ஆக
- ஆடும் இடமாக. பிறை அணி - (கொன்றையினான்) -
பிறையினோடு அணிந்த கொன்றையினான். மறையவன் - பிரமன்.