3445. இலங்கையர் மன்னனாகி யெழில் பெற்ற
       விராவணனைக்
கலங்கவொர் கால்விரலாற் கதிர் பொன்முடி
     பத்தலற
நலங்கெழு சிந்தையனா யருள் பெற்றலு
     நன்களித்த
வலங்கெழு மூவிலையே லுடை யானிடம்
     வக்கரையே.                    8

     8. பொ-ரை: இலங்கை மன்னனான அழகிய இராவணன்
கலங்குமாறு, சிவபெருமான் தன் காற்பெருவிரலை ஊன்றி, ஒளி
வீசுகின்ற பொன்னாலான திருமுடிகளணிந்த அவன் தலைகள்
பத்தும் அலறுமாறு செய்தான். பின் இராவணன் செருக்கு நீங்கி,
நல்ல சிந்தனையோடு இறைவனைப் போற்றிசைக்க, திருவருளால்
இறைவன் அவனுக்கு வீரவாளும், நீண்ட வாழ்நாளும் கொடுத்து
அருள் புரிந்தான். அத்தகைய பெருமான் வலக்கையில்
மூவிலைவேல் ஏந்தி வீற்றிருந்தருளும் இடம் திருவக்கரை என்னும்
திருத்தலமாகும்.

     கு-ரை: ஓர் கால்விரலால், கதிர் பொன் முடி பத்து அலற,
கால் ஐந்து விரலிலும் ஒருவிரல் - அடர்த்ததோ முடி, அவையும்
பத்து, முடியணிந்தது, பொன் முடி - கதிர்விடும் பொன் என்ற நயம்
காண்க. செருக்குற்ற தீய சிந்தையனாகாது. செருக்கு ஒழிந்து
நலங்கெழு சிந்தையனாகி. அருள் பெற்றலும் - திருவருளுக்குப்
பாத்திரமான அளவில், நன்கு - நல்லனவாகிய வாளும், நாளும்,
அளித்த - அருள் புரிந்த - மூவிலை வேல் உடையவன்.