3452. |
பண்ணமர் வீணையினான் பர விப்பணி |
|
தொண்டர்கடம்
எண்ணமர் சிந்தையினா னிமை யோர்க்கு
மறிவரியான்
பெண்ணமர் கூறுடையான் பிர மன்றலை
யிற்பலியான்
விண்ணவர் தம்பெருமான் விரும் பும்மிடம்
வெண்டுறையே. 4 |
4.
பொ-ரை: சிவபெருமான் வீணையிலே பண்ணோடு கூடிய
பாடலை மீட்டுபவர். தம்மைப் போற்றி வணங்குகின்ற
தொண்டர்களின் சிந்தையில் எழுந்தருளியிருப்பவர். தேவர்களால்
அறிவதற்கு அரியவர். உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு
பாகமாகக் கொண்டவர். பிரம கபாலம் ஏந்திப் பிச்சையேற்றவர்.
தேவர்களுக்கெல்லாம் தலைவராக விளங்கும் சிவபெருமான்
வீற்றிருந்தருளும் இடம் திருவெண்டுறை என்னும் திருத்தலமாகும்.
கு-ரை:
பரவி - துதித்து. வணங்குகின்ற. எண் அமர்
சிந்தையினான் - நினைத்தலையுடைய சிந்தையில்
எழுந்தருளியிருப்பவன். பிரமன் தலையிற் பிச்சை ஏற்பவன், ஏற்கும்
- சொல்லெச்சம்.
|