3455. கன்றிய காலனையும் முரு ளக்கனல்
       வாயலறிப்
பொன்றமு னின்றபிரான் பொடி யாடிய
     மேனியினான்
சென்றிமை யோர்பரவுந் திகழ் சேவடி
     யான்புலன்கள்
வென்றவ னெம்மிறைவன் விரும் பும்மிடம்
     வெண்டுறையே.                      7

     7. பொ-ரை: மார்க்கண்டேயரின் உயிரைக் கவரச் சினந்து
வந்த காலன் அலறி விழுமாறு காலால் உதைத்து அழித்தவன்.
திருவெண்ணீற்றினைத் திருமேனியில் பூசியவன். தேவர்களெல்லாம்
சென்று போற்றி வணங்கும் செம்மையான திருவடிகளை உடையவன்.
ஞானிகள் புலன்களை வெல்லும்படி செய்பவன். எம் தலைவனான
அச்சிவ பெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவெண்டுறை என்னும்
திருத்தலமாகும்.

     கு-ரை: கன்றிய - (மார்க்கண்டேயரைக்) கோபித்த. உருள,
வாய் அலறிப் பொன்ற - இறக்க முனிந்த பிரான். கனல்வாய் -
பிறர்க்கு நெருப்பைக் கக்கும் வாய் இங்கு அலறிற்று என்றது
ஒருநயம். ‘கன்றிய காலன்’ (தி.4.ப.26.பா.8) அப்பர் பெருமான்
திருவாக்கிலும் அமைகிறது. ஐம்புலன் வென்றவன் - ஞானிகளுக்கு
ஐம்புலன்களையும் வெல்லுவித்தவன் என்க. “பொறிவாயிலைந்த
வித்தான்” என்ற திருக்குறளுக்கும் இப்பொருள் நேரிது. பிறவினை
விகுதி தொக்கு நின்றது.