3460. கண்பொலி நெற்றியினான் றிகழ் கையிலொர்
       வெண்மழுவான்
பெண்புணர் கூறுடையான் மிகு பீடுடை
     மால்விடையான்
விண்பொலி மாமதிசேர் தரு செஞ்சடை
     வேதியனூர்
தண்பொழில் சூழ்பனந்தாட் டிருத் தாடகை
     ஈச்சரமே.                          1

     1. பொ-ரை: சிவபெருமான் நெற்றிக்கண்ணையுடையவன்.
தூய வெண்மழுவினைக் கையிலேந்தியவன். உமாதேவியைத் தன்
திருமேனியில் ஒரு பாகமாக உடையவன். மிக்க பெருமையுடைய
திருமாலை இடப வாகனமாகக் கொண்டவன். விண்ணிலே
விளங்குகின்ற பிறைச்சந்திரனை அணிந்த சிவந்த சடையினையுடைய,
வேதங்களை அருளிச் செய்த சிவபெருமானுடைய உறைவிடம்
குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த திருப்பனந்தாள் என்னும்
திருத்தலத்திலுள்ள திருத்தாடகையீச்சரம் என்னும் திருக்கோயிலாகும்.

     கு-ரை: கண் பொலிகின்ற நெற்றியினான், திகழ்கையில் -
கையில் விளங்கும். புணர் - ஒருபால் கலந்த. பீடு - பெருமித
நடையையுடைய, விடையன். “ஏறுபோற் பீடுநடை”. (குறள் - 59.)
மால் விடை - திருமாலாகிய இடபம். “தடமதில்க ளவைமூன்றும்
தழல் எரித்த அந்நாளில் இடபமதாய்த் தாங்கினான் திருமால்காண்
சாழலோ” (திருவாசகம். 269). ‘திருத்தாடகையீச்சரம்’
திருக்கோயிலின் பெயர்.