3462. |
உடுத்தவன் மானுரிதோல் கழ லுள்கவல் |
|
லார்வினைகள்
கெடுத்தருள் செய்யவல்லான் கிளர் கீதமொர்
நான்மறையான்
மடுத்தவ னஞ்சமுதா மிக்க மாதவர்
வேள்வியைமுன்
தடுத்தவனூர் பனந்தாட் டிருத் தாடகை
யீச்சரமே. 3 |
3.
பொ-ரை: சிவபெருமான் மான்தோலை ஆடையாக
அணிந்தவன். தன் திருவடிகளை நினைத்து வழிபடுபவர்களின்
வினைகளைப் போக்குபவன். இனிய இசையுடைய நால்வேதங்களை
அருளிச்செய்து அவ்வேதங்களின் உட்பொருளாகவும் விளங்குபவன்.
பாற்கடலில் தோன்றிய நஞ்சை அமுதம்போல் உட்கொண்டவன்.
தன்னை மதியாது தக்கன் செய்த வேள்வியைத் தகர்த்தவன்.
இத்தகைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் உறைவிடம்
திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்திலுள்ள, திருத்தாடகையீச்சரம்
என்னும்கோயிலாகும்.
கு-ரை:
உடுத்தவன் மான் உரித்தோல் - மானை உரித்த
தோலை உடையாக உடுத்தவன், மான் தோலும் இறைவனுக்கு உடை
என்பதை புள்ளியுழைமானின் தோலான் கண்டாய் என்ற அப்பர்
வாக்காலும் அறிக. கழல்கள் உள்க வல்லார் வினை - திருவடிகளை
நினைப்பவரது வினைகளைக் (கெடுத்து, அருள் செய்ய வல்லான்)
கிளர் - மிக்கு ஒலிக்கின்ற. கீதம் - கீதத்தினோடும். ஓர்
நான்மறையான் - ஒரு நான்கு வேதங்களையும் உடையவன். (நஞ்சு
அமுதாகுமாறு) மடுத்தவன் -உண்டவன். மாதவர் - தாருகவனத்து
முனிவர்.
|