3463. சூழ்தரு வல்வினையு முடல் தோன்றிய
       பல்பிணியும்
பாழ்பட வேண்டுதிரேன் மிக வேத்துமின்
     பாய்புனலும்
போழிள வெண்மதியும் மனல் பொங்கரவும்
     புனைந்த
தாழ்சடை யான்பனந்தாட் டிருத் தாடகை
     யீச்சரமே.                         4

     4. பொ-ரை: பிறவிதோறும் உயிர்களைச் சூழ்ந்து வருகின்ற
எளிதில் நீங்காத வினைகளும், அவற்றின் காரணமாக உடலில்
தோன்றும் பலவகை நோய்களும் நீங்க வேண்டும் என்று
எண்ணுவீராயின் பாய்கின்ற கங்கையையும், பிளவுபட்ட இளமையான
வெண்ணிறச் சந்திரனையும், நெருப்புப் போல் விடம் கக்கும்
பாம்பையும் அணிந்த தாழ்ந்த சடையினையுடைய சிவபெருமான்
வீற்றிருந்தருளுகின்ற திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்திலுள்ள,
திருத்தாடகையீச்சரம் என்னும் திருக்கோயிலை மிகவும் போற்றி
வழிபடுவீர்களாக!

     கு-ரை: சூழ் தரு - பற்றிவிடாது சூழ்ந்த, வல்வினையும்
(எளிதில் நீங்காத) வலிய வினைகளும். “பற்றி நின்ற வல்வினை”
என்பர் அப்பர்பெருமான். உடன் தோன்றிய - உடலோடு தோன்றிய.
பல் பிணி - பல நோய்களும். “உடன் பிறந்தே கொல்லும் வியாதி”
என்பது மூதுரை. ஏத்துமின் - துதியுங்கள். அனல் பொங்கு அரவும்
- விடம் பொங்கும் அரவும். தாழ் - தொங்குகின்ற; சடையான்.
இடமாகிய தாடகையீச்சரத்தை ஏத்துமின் என்க.