3465. விடையுயர் வெல்கொடியா னடி விண்ணொடு
       மண்ணுமெல்லாம்
புடைபட வாடவல்லான் மிகு பூதமார்
     பல்படையான்
தொடைநவில் கொன்றையொடு வன்னி துன்னெருக்
     கும்மணிந்த
சடையவ னூர்பனந்தாட் டிருத் தாடகை
     யீச்சரமே.                         6

     6. பொ-ரை: சிவபெருமான் வெற்றிக் கொடியாக இடபம்
பொறித்த கொடி உடையவன். விண்ணுலகமும், மண்ணுலகமும்,
மற்றுமுள்ள எல்லா உலகங்களும் தன் திருவடிபதியுமாறு விசுவரூபம்
எடுத்து ஆடவல்லவன். பலவகையான பூதகணங்களைப் படையாக
உடையவன். கொன்றைமாலையோடு, வன்னி, எருக்கம் இவை
அணிந்த சடையுடையவன். அப்பெருமான் வீற்றிருந்தருளும்
உறைவிடம் திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்திலுள்ள
திருத்தாடகையீச்சரம் என்னும் திருக்கோயிலாகும்.

     கு-ரை: விண்ணொடு மண்ணும் எல்லாம் புடைபட -
விண்ணுலகம்’ மண்ணுலகம் முதலிய எல்லா உலகங்களும், தன்
அடியின் பக்கத்திலே தங்கும்படி; ஓங்கி ஆடவல்லான் என்றது,
பேருரு எடுத்து ஆடுதலைக் குறித்தது. அது “பூமே லயனறியா
மோலிப் புறத்ததே, நாமே புகழ்ந்தளவை நாட்டுவோம் ...
கூத்துகந்தான் கொற்றக் குடை” (கோயில் நான்மணிமாலை.
பா.1.) என்பதுங் காண்க. படையான் - சேனைகளையுடையவன்.
தொடை - மாலை. துன் - நெருங்கிய.