3466. மலையவன் முன்பயந்த மட மாதையொர்
       கூறுடையான்
சிலைமலி வெங்கணையாற் புர மூன்றவை
     செற்றுகந்தான்
அலைமலி தண்புனலும் மதி யாடர
     வும்மணிந்த
தலையவ னூர்பனந்தாட் டிருத் தாடகை
     யீச்சரமே.                        7

     7. பொ-ரை: சிவபெருமான் மலையரசன் பெற்றெடுத்த
உமாதேவியைத் தன் திருமேனியின் ஒருபாகமாகக் கொண்டவன்.
மேரு மலையை வில்லாக்கி, அக்கினியைக் கணையாக்கி
முப்புரங்களையும் எரித்துச் சாம்பலாகும்படி அழித்தவன்.
அலைகளையுடைய குளிர்ந்த கங்கையையும், சந்திரனையும்,
பாம்பையும் அணிந்த சடைமுடியுடையவன். அப்பெருமான்
வீற்றிருந்தருளுவது திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்திலுள்ள
திருத்தாடகையீச்சரம் என்னும் திருக்கோயிலாகும்.

     கு-ரை: மலையவன் - இமயமலையரசன். பயந்த - பெற்ற.
அலை மலி தண்புனல் - கங்கை. தலையவன் - தலைமையானவன்.