3469. ஆதர் சமணரொடும் மடை யைந்துகில்
       போர்த்துழலும்
நீத ருரைக்குமொழி யவை கொள்ளன்மி
     னின்மலனூர்
போதவிழ் பொய்கைதனுட் டிகழ் புள்ளிரி
     யப்பொழில்வாய்த்
தாதவி ழும்பனந்தாட் டிருத்
     தாடகை யீச்சரமே.                   10

     10. பொ-ரை: பயனிலிகளாகிய சமணர்களும், அழகிய
துணிகளைப்போர்த்துத் திரிகின்ற புத்தர்களும் உரைக்கின்ற
மொழிகளை ஏற்றுக் கொள்ளாதீர்கள். நின்மலனான சிவபெருமானது
உறைவிடம் தாமரை மொட்டுகள் மலர்கின்ற பொய்கைகளில்
புள்ளினங்கள் ஓடச் சோலைகளிலுள்ள மலர்களின் மகரந்தப்
பொடிகள் உதிரும் திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்திலுள்ள
திருத்தாடகை யீச்சரம் என்னும் திருக்கோயிலாகும்.

     கு-ரை: ஆதர் - பயனிலிகள், ஐந்துகில் .... நீதர் - நீசர் -
புத்தர். உரைக்கும் மொழி கொள்ளன்மின். நின்மலன் ஊராகிய
திருப்பனந்தாளை. அடைந்துய்ம்மின் என்பது அவாய்நிலை.