|  | 
         
          | 3471. | பைங்கோட்டு மலர்ப்புன்னைப் பறவைகாள் |   
          |  | பயப்பூரச் சங்காட்டந் தவிர்த்தென்னைத் தவிராநோய்
 தந்தானே
 செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டன்
 பணிசெய்ய
 வெங்காட்டு ளனலேந்தி விளையாடும்
 பெருமானே.                         1
 |  
             1. 
        பொ-ரை: பசுமையான கிளைகளில் மலர்களையுடைய புன்னைமரத்தில் வீற்றிருக்கும் பறவைகளே! தலைவனான
 சிவபெருமான் என்னைப் பிரிந்ததால் உடம்பு பசலைநிறம் பெற,
 ஆடி ஆடி உல்லாசமாக இயங்கிய என் மகிழ்ச்சியை நீக்கி எனக்குத்
 தாங்காத துன்பம் தந்தான். அவன் திருச்செங்காட்டங்குடி என்னும்
 திருத்தலத்தில் சிறுத்தொண்டர் பணி செய்ய சுடுகாட்டுள், கையில்
 அனல் ஏந்தி திருநடனம் புரியும் பெருமானாவான்.
       கு-ரை: 
        பைம்கோட்டு - பசிய கிளைகளில். மலர்ப்புன்னை - மலர்களையுடைய புன்னை மரத்திலுள்ள (பறவைகாள்). பயப்பு
 - பசப்பு, பசலைநிறம். ஊர - உடம்பிற்பரவ. சங்கு ஆட்டம் -
 சங்குப் பூச்சிகள் திரையில் தவழ்வதுபோலத் தனியே உலாவிய என்
 மகிழ்ச்சியை, தவிர்த்து - நீக்கி, என்னைத், தவிரா - அழியாத;
 துயர்தந்தான். ஏகாரம் இரங்கற்குறிப்பு. இடைச்சொல் - இடத்துக்கு
 ஏற்ற பொருள் தரும் என்பர். வெம்காட்டுள் - கொடிய மயானத்துள்
 (அனல் ஏந்தி விளையாடும் பெருமான்.) ஏகாரம் - ஈற்றசை.
 |