3473. குட்டத்துங் குழிக்கரையுங் குளிர்பொய்கைத்
       தடத்தகத்தும்
இட்டத்தா லிரைதேரு மிருஞ்சிறகின்
     மடநாராய்
சிட்டன்சீர்ச் சிறுத்தொண்டன் செங்காட்டங்
     குடிமேய
வட்டவார் சடையார்க்கென் வருத்தஞ்சென்
     றுரையாயே.                        3

     3. பொ-ரை: குட்டை, குழி, குளிர்ந்த பொய்கை ஆகிய
இடங்களில் விருப்பத்துடன் இரையைத் தேர்கின்ற பெரிய இரு
சிறகுகளை உடைய இளநாரையே! புகழ்மிக்க சிறுத்தொண்டர்
நியமத்தோடு வழிபடத் திருச்செங்காட்டங்குடியில் வீற்றிருந்
தருளுகின்ற நீண்ட அடர்ந்த சடைமுடியுடைய சிவபெருமானிடம்
சென்று என் வருத்தத்தை உரைக்க மாட்டாயோ? உரைப்பாயாக
என்பது குறிப்பு.

     கு-ரை: குட்டத்தும் - நீர் நிலையிலும்; குளத்திலும் சிறியது.
“கடற்குட்டம் போழ்வர் கலவர்” என்பது நான்மணிக்கடிகை.
பொய்கைத் தடத்தும் - பொய்கையாகிய தடாகத்தினிடத்தும்;
பொய்கை, தடம் இரண்டும் ஒரு பொருளையே குறித்தலால் இரு
பெயரொட்டுப் பண்புத்தொகை. இட்டத்தால் - விருப்போடு. இரை
தேரும் - இரையைத் தேர்கின்ற, மடநாராய் - இள நாரையே.
சிட்டன் - நியமம் உடையவன். சென்று சடையை யுடையவனாகிய
பெருமானுக்கு என் வருத்தம் உரையாய். பொய்கை - மானிடர்
ஆக்காத நீர் நிலை.