3476. குறைக்கொண்டா ரிடர்தீர்த்தல் கடனன்றே
       குளிர்பொய்கைத்
துறைக்கெண்டை கவர்குருகே துணைபிரியா
     மடநாராய்
கறைக்கண்டன் பிறைச்சென்னிக் கணபதீச்
     சரமேய
சிறுத்தொண்டன் பெருமான்சீ ரருளொருநாட்
     பெறலாமே.                         6

     6. பொ-ரை: தங்களின் குறைகளைத் தீர்க்க
வேண்டுபவர்களின் துன்பத்தைப் போக்குதல் தலைவரானவரின்
கடமை அன்றோ? குளிர்ந்த குளத்தின் கரையில் கெண்டை மீனைக்
கவர்ந்து இரையாகக் கொள்ளும் பறவையே! துணையைப்
பிரியாதிருக்கும் மடநாரையே! நீலகண்டரும், பிறைச்சந்திரனைத்
தலையிலே சூடியுள்ளவரும், கணபதீச்சரம் என்னும் திருக்கோயிலில்
சிறுத்தொண்டரால் வழி படப்படுபவரும் ஆகிய சிவபெருமானது
சீராகிய எய்ப்பிடத்து உதவும் பேரருளை நான் பெறுமாறு தூது
சென்றுரைப்பீர்களாக!

     கு-ரை: குறைக்கொண்டார் - குறைவேண்டிக்
கொள்பவர்களின் இடர்தீர்த்தல் - நேர்ந்த துன்பத்தைப் போக்குதல்.
கடன் அன்றே உபகாரிகளுக்குக் கடமையல்லவா. பெருமானது சீர்
எய்ப்பிடத்து உதவும் பேரருளை நான் பெறுமாறு தூது
சென்றுரைப்பீர்களாக. (பொய்கைத் துறையில்) கெண்டை - கெண்டை
மீனை. கவர் - கவர்ந்துண்ணும், குருகே - பறவையே; நாரையே.
கறைக்கண்டனும், பிறைச் சென்னியையுடைய பெருமானும்.
சிறுத்தொண்டன் பெருமான் - சிறுத்தொண்டர் வழிபடும் பெருமானும்
ஆகிய இறைவன். மூன்றன் உருபும் பயனுந்தொக்க தொகை.