3477. கருவடிய பசுங்கால்வெண் குருகேயொண்
       கழிநாராய்
ஒருவடியா ளிரந்தாளென் றொருநாட்சென்
     றுரையீரே
செருவடிதோட் சிறுத்தொண்டன் செங்காட்டங்
     குடிமேய
திருவடிதன் திருவருளே பெறலாமோ
     திறத்தவர்க்கே.                     7

     7. பொ-ரை: கரிய சேற்றில் அளைந்த பசுங்காலையுடைய
வெண்குருகே! அழகிய கழியிலுள்ள நாரையே! போர் செய்வதால்
வலிமை பெற்ற அழகிய வடிவுடைய தோள்களையுடைய
சிறுத்தொண்டர் வழிபடுகின்ற திருச்செங்காட்டங்குடியிலுள்ள
திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமானின் திரு
வடிகளை வழிபடும் திறத்தவர்களே அவன் திருவருளைப்
பெறலாமோ? ஓர் அடியாள் அவருடைய திருவருளைக் கெஞ்சி
வேண்டினாள் என்று ஒரு நாளாவது சென்று அவரிடம் உரைப்பீராக!

     கு-ரை: கரு அடிய - கரிய பாதத்தை உடைய. (பசுங்
காலைக் கொண்ட) ஒண் - அழகிய, கழி - கழியில் உள்ள, கரு +
அடிய. ‘காரடிய’ ஒரு அடியாள். ஒருஅடியாள் இரந்தாள் - கெஞ்சி
வேண்டிக் கொண்டாள். என்று ஒருநாள் - ஒரு நாளைக்கேனும்.
சென்று - போய். உரையீர் - சொல்வீர். செரு - போரில்,
வடித்ததோள், சிறுத்தொண்டன் - சிறுத்தொண்டரது
(செங்காட்டங்குடி) மேய - மேவிய. திரு அடிதன் திருவருளே
திறத்தவர்க்கு - அவன் வழிச்செல்பவர்கட்கு.