3479. நறப்பொலிபூங் கழிக்கான னவில்குருகே
       யுலகெல்லாம்
அறப்பலிதேர்ந் துழல்வார்க்கென் னலர்கோட
     லழகியதே
சிறப்புலவான் சிறுத்தொண்டன் செங்காட்டங்
     குடிமேய
பிறப்பிலிபேர் பிதற்றிநின் றிழக்கோவெம்
     பெருநலமே.                      9

     9. பொ-ரை: தேனுடைய பூக்கள் நிறைந்த கழியின்
கரையிலுள்ள சோலையில் வாழ்கின்ற பறவையே! உலக
மக்களெல்லாம் அறத்தைக் கருதி இடுகின்ற பிச்சையை ஏற்று
உழல்கின்ற சிவபெருமானுக்குப் பிறர் என்னைத் தூற்றுமாறு
செய்வது அழகாகுமா? சிறப்புடைய சிறுத்தொண்டன் வழிபடும்
திருச்செங்காட்டங்குடியில் வீற்றிருந்தருளுகின்ற பிறப்பிலியாகிய
சிவபெருமானுடைய திருநாமத்தைப் போற்றித் துதிசெய்யும் நான்
எல்லாவிதப் பெருமைக்குரிய நலங்களை இழப்பது முறைமையா?

     கு-ரை: நறவு - தேன், நவில் - வாழ்கின்ற, (பலி
உலகெல்லாம் தேர்ந்து) அறப்பலி - அறத்தைக் கருதித் தரும்
பிச்சை. என் அலர் கோடல் - என்னைப்பற்றி எழும்பிய அலர்
தூற்ற நின்ற பழியைக் கோடல்.