3482. |
கருமானி னுரியுடையர் கரிகாட |
|
ரிமவானார்
மருமானா ரிவரென்று மடவாளோ
டுடனாவர்
பொருமான விடையூர்வ துடையார்வெண்
பொடிப்பூசும்
பெருமானார் பிஞ்ஞகனார் பெருவேளூர்
பிரியாரே. 2 |
2.
பொ-ரை: சிவபெருமான் கரியமானின் தோலை
ஆடையாக உடுத்தவர். சுடுகாட்டில் ஆடுபவர். இமவான் மருமகன்
இவர் என்று சொல்லும்படி உமாதேவியை உடனாகக் கொண்டவர்.
போர்புரிய வல்ல பெருமையையுடைய இடப வாகனத்தில் ஊர்ந்து
செல்பவர். திருவெண்ணீற்றினைப் பூசியவர். பிஞ்ஞகன் என்று
போற்றப்படும் அச்சிவபெருமான் திருப்பெருவேளூர் என்னும்
திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பிரிய நாதர் ஆவார்.
கு-ரை:
கருமானின் - கரிய மானினது; மானில் கருநிறம்
உடைய ஒரு சாதி உண்டென்றும், அதனால் மானுக்குக் கிருஷ்ணம்
எனப் பேர் என்றும் கூறுப, மருமானார் - மருமகனார் என்பதன்
மரூஉ; இவரென்று உலகத்தவர் சொல்ல. என்று - என்ன என்னும்
வினையெச்சத் திரிபு. பொரு - போர்புரியவல்ல. மானவிடை -
பெருமை பொருந்திய விடை.
|