3484. இறைக்கொண்ட வளையாளோ டிருகூறா
       யொருகூறு
மறைக்கண்டத் திறைநாவர் மதிலெய்த
     சிலைவலவர்
கறைக்கொண்ட மிடறுடையர் கனல்கிளருஞ்
     சடைமுடிமேல்
பிறைக்கொண்ட பெருமானார் பெருவேளூர்
     பிரியாரே.                         4

     4. பொ-ரை: சிவபெருமான், முன்கையில் வளையலணிந்த
உமாதேவி ஒரு கூறாகவும், தாம் ஒரு கூறாகவும் இருகூறுடைய
அர்த்தநாரியாய் விளங்குபவர். வேதங்களை அருளிச் செய்த
நாவுடையர். மும்மதில்களை எய்த மேருமலையை வில்லாக
உடையவர். நஞ்சை அடக்கியதால் கறைகொண்ட கண்டத்தர்.
நெருப்புப்போல் மிளிரும் சிவந்த சடையில் பிறையணிந்த
பெருமானாகிய அவர் திருப்பெருவேளூர் என்னும் திருத்தலத்தில்
வீற்றிருந்தருளும் பிரியநாதர் ஆவார்.

     கு-ரை: இறை - முன்கை. கனல் கிளரும் - தீப்போற்
பிரகாசிக்கும்.