3485. விழையாதார் விழைவார்போல் விகிர்தங்கள்
       பலபேசிக்
குழையாதார் குழைவார்போற் குணநல்ல
     பலகூறி
அழையாவு மரற்றாவு மடிவீழ்வார்
     தமக்கென்றும்
பிழையாத பெருமானார் பெருவேளூர்
     பிரியாரே.                         5

     5. பொ-ரை: உலகப் பொருள்களில் பற்றுக் கொண்டு
விழையாமல் இறைவன்பால் விழைத்து பலவாறு போற்றி, உலகியலில்
மருள்கொண்டு குழையாது, இறைவனின் திருவருளில் குழைந்து
அவன் புகழைப் பலவாறு எடுத்துக்கூறி, “பெருமானே! அருள்
புரிவீராக!” என அழைத்தும், அரற்றியும், அவன் திருவடிகளில்
வீழ்ந்து வணங்குபவர்கட்கு என்றும் தவறாது உடனே அருள்புரியும்
சிவபெருமான் திருப்பெருவேளூர் என்னும் திருத்தலத்தில்
வீற்றிருந்தருளும் பிரியநாதர் ஆவார்.

     கு-ரை: விகிர்தம் - வேறுபாடு ஆனமொழி. அழையாவும்
அரற்றாவும் - அழைத்தல் ஆகவும், அரற்றுதல் ஆகவும்.