3488. எரியார்வேற் கடற்றானை யிலங்கைக்கோன்
       றனைவீழ
முரியார்ந்த தடந்தோள்க ளடர்த்துகந்த
     முதலாளர்
வரியார்வெஞ் சிலைபிடித்து மடவாளை
     யொருபாகம்
பிரியாத பெருமானார் பெருவேளூர்
     பிரியாரே.                          8

     8. பொ-ரை: நெருப்புப் போல் சிவந்த வேற்படை உடைய
சேனைகளைக் கடல்போல் விரியப் பெற்றுள்ள இராவணன்
அலறுமாறு, வலிமை வாய்ந்த அவனுடைய அகன்ற தோள்களை
நெரித்துப் பின்னர் அவன் சாமகானம் பாடக் கேட்டுகந்த
முதல்வரான சிவபெருமான், கட்டுக்களையுடைய கொடிய வில்லேந்தி,
உமாதேவியைத் தம்திருமேனியின் ஒருபாகமாகப் பிரியாது பெற்று,
திருப்பெருவேளூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும்
பிரியநாதர் ஆவார்.

     கு-ரை: எரி ஆர் - நெருப்புப் பொருந்திய. வேல்:- வெல்லக்
கூடியது என்னும் காரணக் குறியாய், இங்கு ஆயுதப் பொதுப்
பெயராய் நின்றது. மூரி என்ற வலிமையைக் குறிக்கும் சொல்,
குறுக்கல் விகாரம் உற்றது.

     முதல் ஆளர் - முதன்மையை ஆள்பவர். வரி ஆர் -
கட்டுக்களையுடைய. வெஞ்சிலை - கொடியவில்.