| 
         
          | 3489. | சேணியலு நெடுமாலுந் திசைமுகனுஞ் |   
          |  | செருவெய்திக் காணியல்பை யறிவிலராய்க் கனல்வண்ண
 ரடியிணைக்கீழ்
 நாணியவர் தொழுதேத்த நாணாமே
 யருள்செய்து
 பேணியவெம் பெருமானார் பெருவேளூர்
 பிரியாரே.                          9
 |  
            9. 
        பொ-ரை: திருவிக்கிரமாவதாரத்தில் வானை அளந்த திருமாலும், பிரமனும் செருக்குற்றுத் தாமே தலைவர் எனக் கருதி
 இறைவனைத் தேட, அவனைக் காணும் முறையை அறியாதவராய்,
 நெருப்பு வண்ணமாய் நின்ற சிவபெருமானின் திருவடிக்கீழ்
 நாணமுற்று நின்று தொழுது போற்ற, அவர்களின் நாணத்தைப்
 போக்கி அருள்செய்து பாதுகாத்த அப்பெருமான் திருப்பெருவேளூர்
 என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பிரியநாதர் ஆவார்.
       கு-ரை: 
        சேண் இயலும் நெடுமாலும் - திரு விக்கிரமாவதாரத்தில் வானை அளந்த திருமாலும். திசைமுகனும் -
 பிரமனும். செரு எய்தி - தம்முள் மாறுபட்டு. செரு - போர்; அதன்
 காரணமாகிய மாறுபாட்டைக் குறித்தமையால் காரணம் காரியமாக
 உபசரிக்கப்பட்டது.
       காண் இயல்பை 
        - காணும் முறையை (அறியாது) அது, திருக் குறுந்தொகையிற் கூறியபடி மரங்களேறி மலர்
 பறித்திட்டிலார், நிரம்ப நீர் சுமந்தாட்டி நினைத்திலார், உரம்
 பொருந்தி ஒளிநிற வண்ணனை, நிரம்பக் காணலுற்றார்
 அங்கிருவரே என்பதால் அறியப்படும். இவர்கள் தங்கள்
 அறியாமைக்கு நாணினர். அது ஆன்ம இயல்பு என உணர்த்தி
 இறைவர் நாணம் போக்கி அருள் செய்தனர்.
 |