3490. புற்றேறி யுணங்குவார் புகையார்ந்த
       துகில்போர்ப்பார்
சொற்றேற வேண்டாநீர் தொழுமின்கள்
     சுடர்வண்ணம்
மற்றேரும் பரிமாவு மதகளிறு
     மிவையொழியப்
பெற்றேறும் பெருமானார் பெருவேளூர்
     பிரியாரே.                       10

     10. பொ-ரை: புற்றேறும்படி கடுமையான தவத்தால் உடம்பை
வாட்டும் சமணர்களும், மஞ்சட்காவியூட்டிய ஆடையை அணியும்
புத்தர்களும் இறையுண்மையை உணராது கூறும் சொற்களை நீங்கள்
ஏற்க வேண்டா. நெருப்புப் போன்று சிவந்த வண்ணமுடையவனும்,
தேரும், குதிரையும், யானையும் வாகனமாகக் கொள்ளாது,
இடபத்தை வாகனமாகக் கொண்டுள்ள தலைவனுமான,
திருப்பெருவேளூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும்
பிரியநாதனை நீவிர் தொழுது வணங்குங்கள்.

     கு-ரை: புற்றேறி உணங்குவார் - சமணர். புகை ஆர்ந்த
துகில் போர்ப்பார் - புத்தர். சொல் தேற வேண்டா. வண்ணமாவது
சுடர். மல்தேர், மல்லல்தேர் - சிறப்புடைய தேர். மல்லர் - கடைக்
குறைந்து நின்றது. பெற்று - இடபம். ஏறும் பெருமானார்
பெருவேளூர் பிரியார், அவர் வண்ணம் சுடர், அவரைத்
தொழுமின்கள் என்க. “கடகரியும் பரிமாவும் தேரும் உகந்தேறாதே
இடபம் உகந்து ஏறியவாறு எனக்கறிய இயம்பேடி” என வரும்
பாடலடிகளோடு பின்னிரண்டு அடியையும் ஒப்பிடுக. (தி.8
திருச்சாழல் - 15.)