3491. பைம்பொன்சீர் மணிவாரிப் பலவுஞ்சேர்
       கனியுந்தி
அம்பொன்செய் மடவரலா ரணிமல்கு
     பெருவேளூர்
நம்பன்றன் கழல்பரவி நவில்கின்ற
     மறைஞான
சம்பந்தன் தமிழ்வல்லார்க் கருவினைநோய்
     சாராவே.                         11

     11. பொ-ரை: அழகிய பொன்னையும், சிறந்த மணிகளான
இரத்தினங்களையும், பலவகையான கனிகளையும் அடித்துக்
கொண்டுவரும் காவிரியில், பொன்னாலாகிய அழகிய
ஆபரணங்களை அணிந்த, நீராடும் மகளிர்கள் மிகுந்த
திருப்பெருவேளூரில் வீற்றிருக்கும் சிவபெருமானின் திருவடிகளைப்
போற்றிஅருளிய வேதம்வல்ல ஞானசம்பந்தனின் இச்செந்தமிழ்ப்
பதிகத்தை ஓத வல்லவர்களை அருவினைகளும், அவற்றால் வரும்
பிறவிநோயும் சாரா.

     கு-ரை: பைம்பொன் - பசிய பொன்னையும். சீர் - சிறப்புப்
பொருந்திய. மணி - இரத்தினங்களையும் (வாரி). சேர் -
திரட்சியான. கனி பலவும் - கனிகள் பலவற்றையும். உந்தி -
அடித்துக் கொண்டு வரும் (காவிரியில்). அம்பொன்செய் - அழகிய
பொன் அணிகளால் (அலங்கரித்தலைச்) செய்த. மடவரலார் -
நீராடும் மகளிரின். அணி - வரிசை. மல்கும் - மிகுந்த (பெருவேளூர்
நம்பன்). செய் - பொதுவினை சிறப்பு வினைக்காயிற்று.
(சிவபெருமானின்) கழல் - திருவடிகளை; துதித்து. நவில்கின்ற -
பாடுகின்ற. மறை - வேதநூல்; வல்ல ஞானசம்பந்தன். தமிழ்
வல்லார்க்கு வினையால் நேரும் நீக்குதற்கு அரிய துன்பங்கள்
சாரமாட்டா. வினைநோய் - வினையால் வரும் நோய் என மூன்றன்
உருபும் பயனும் தொக்க தொகை. உந்தி பெயர்ச்சொல் - உந்து +
இ = இகரம் வினை முதற்பொருளில் வந்தது.