3493. காரூரு மணிமிடற்றார் கரிகாட
       ருடைதலைகொண்
ஊரூரன் பலிக்குழல்வா ருழைமானி
     னுரியதளர்
தேரூரு நெடுவீதிச் செழுங்கச்சி
     மாநகர்வாய்
நீரூரு மலர்ப்பொய்கை நெறிக்காரைக்
     காட்டாரே.                         2

     2. பொ-ரை: சிவபெருமான் கார்மேகம் போன்ற
நீலநிறமுடைய கண்டத்தார். கொள்ளிகள் கரிந்த சுடு
காட்டிலிருப்பவர், பிரமகபாலத்தைக் கையிலேந்தி ஊர்தோறும்
சென்று பிச்சை எடுத்துத் திரிவார். மான்தோலை ஆடையாக
உடுத்தவர். அப்பெருமான் தேரோடும் நீண்ட வீதிகளையுடைய
செழிப்புடைய திருக்கச்சிமாநகரில் நீர் நிறைந்த, மலர்கள்
பூத்துள்ள குளங்களையுடைய திருக்கச்சிநெறிக் காரைக்
காட்டில் வீற்றிருந்தருளுகின்றார்.

     கு-ரை: கார்ஊரும் - மேகம்போன்ற. மணி - நீலநிறம்
வாய்ந்த. மிடற்றார் - கண்டத்தையுடையவர். கரி - கொள்ளிகள்
கரிந்த. காடர் - மயானத்திலிருப்பவர். ஊர் - ஊர்கள்தோறும்.
ஊரான் - (பிச்சைக்குத்) திரிபவனைப் போல. பலிக்கு -
பிச்சையின்பொருட்டு. உழல்வார் - திரிவார். உரி - உரியாகிய.
அதளர் - தோலாடையையுடையவர் “புள்ளி உழைமானின்,
தோலான் கண்டாய்” (தி.6. ப.23. பா.4.) என்னும் திருவாக்காலும்
அறிக.