| 
         
          | 3495. | பிறைநவின்ற செஞ்சடைகள் பின்றாழப் |   
          |  | பூதங்கள் மறைநவின்ற பாடலோ டாடலராய்
 மழுவேந்திச்
 சிறைநவின்ற வண்டினங்கள் தீங்கனிவாய்த்
 தேன்கதுவும்
 நிறைநவின்ற கலிக்கச்சி நெறிக்காரைக்
 காட்டாரே.                       4
 |  
             4. 
        பொ-ரை: பிறைச்சந்திரனைச் சூடிய சிவந்த சடைகள் பின் பக்கம் தொங்க, பூதகணங்கள் நால்வேதங்களை ஓதப்
 பாடலும், ஆடலும் கொண்டு மழுப்படை ஏந்திச் சிவபெருமான்
 விளங்குகின்றார். அப்பெருமான் சிறகுகளையுடைய வண்டுகள்
 இனிய கனிகளில் சொட்டும் தேனை உறிஞ்சி உண்ட மகிழ்ச்சியில்
 இன்னொலி செய்யும் திருக்கச்சிநெறிக் காரைக்காட்டில் வீற்றிருந்
 தருளுகின்றார்.
       கு-ரை: 
        நவின்ற - தங்கிய. பின் - பின்புறத்தில். தாழ - தொங்க. பூதங்கள் - பூதங்கள்; பாடும். மறை நவின்ற -
 வேதங்களைப் பாடுகின்ற 
        (பாடலோடு) ஆடலர் ஆய் - ஆடுதலை
 உடையவராய். (சோலைகளில்) சிறைநவின்ற - சிறகுகளையுடைய;
 வண்டு இனங்கள். தீங்கனி வாய்த்தேன் - மலரிலுள்ள தேனை
 வெறுத்து இனிய கனிகளில் சொட்டும் தேனை. கதுவும் -
 பற்றியுண்பதால். நவின்ற - உண்டான. நிறைகலி - நிறைந்த
 ஓசையையுடைய (கச்சி).
 |