3496. அன்றாலின் கீழிருந்தங் கறம்புரிந்த
       வருளாளர்
குன்றாத வெஞ்சிலையிற் கோளரவ
     நாண்கொளுவி
ஒன்றாதார் புரமூன்று மோங்கெரியில்
     வெந்தவிய
நின்றாருங் கலிக்கச்சி நெறிக்காரைக்
     காட்டாரே.                       5

     5. பொ-ரை: சிவபெருமான் அன்று ஆலமரநிழலின் கீழிருந்து
சனகாதி முனிவர்கட்கு அறம் உரைத்த அருளாளர், குன்றாத
வலிமையுடைய மேருமலையை வில்லாகக் கொண்டு, கொல்லும்
தன்மையுடைய பாம்பை நாணாகப்பூட்டி, பகையசுரர்களின்
முப்புரங்களை மிக்க நெருப்பில் வெந்தழியும்படி செய்தவர்.
அப்பெருமான் ஒலிமிகுந்த திருக்கச்சி நெறிக்காரைக்காட்டில்
வீற்றிருந்தருளுகின்றார்.

     கு-ரை: அன்று - அக்காலத்தில். ஆலின்கீழ் இருந்து -
கல்லால மரத்தின் அடியில் வீற்றிருந்து. அறம் - சிவதருமமாகிய
சரியை, கிரியைகளையும். (யோக, ஞானங்களையும்) புரிந்த -
விரும்பியுரைத்த. அருளாளர் - கிருபையுடையவர். குன்றாத -
வலிமையிற் குறையாத. கோள் அரவம் - கொல்லுதலையுடைய
பாம்பை. நாண் கொளுவி - நாணாகப்பூட்டி. ஒன்றாதார் -
பகைவராகிய அசுரர்களின் (புரம் மூன்றும்). ஓங்கு எரியில் -
மிக்க நெருப்பில். வெந்து அவிய - வெந்தொழிய.