3506. கலவஞ்சேர் கழிக்கானல்
       கதிர்முத்தங் கலந்தெங்கும்
அலவஞ்சே ரணைவாரிக்
     கொணர்ந்தெறியு மகன்றுறைவாய்
நிலவஞ்சேர் நுண்ணிடைய
     நேரிழையா ளவளோடும்
திலகஞ்சேர் நெற்றியினார்
     திருவேட்டக் குடியாரே.           4

     4. பொ-ரை: மயில்கள் தோகை விரித்து ஆடும் கடற்கரைச்
சோலைகளை உடைய, கடல் நண்டுகள் சேர்ந்த குவியல்களை
வாரிக்கொணர்ந்து சேர்க்கின்ற காவிரியின் அகன்ற கரையில், ஒளி
பொருந்திய குறுகிய இடையை உடைய அழகான அணிகலன்களை
அணிந்த உமாதேவியோடு, திலகம் போன்று சுடர்தரும் நெற்றியுடைய
சிவபெருமான் திருவேட்டக்குடி என்னும் திருத்தலத்தில்
வீற்றிருந்தருளுகின்றான்.

     கு-ரை: கழிக்கானல் எங்கும் என்க. அலவன் சேர் - கடல்
நண்டுகள் சேர்ந்த. அணை - குவியலை. நிலவம்சேர் - ஒளி
பொருந்திய. இடைய - இடையையுடையவளாகிய, குறிப்புப்
பெயரெச்சம். நேர் இழையாள் - அழகான அணிகலனை யணிந்தவள்.
நிலவு என்னும் சொல் அம்சாரியை பெற்றது.