3510. துறையுலவு கடலோதஞ்
       சுரிசங்க மிடறிப்போய்
நறையுலவும் பொழிற்புன்னை
     நன்னீழற் கீழமரும்
இறைபயிலு மிராவணன்றன்
     றலைபத்து மிருபதுதோள்
திறலழிய வடர்த்தாருந்
     திருவேட்டக் குடியாரே.           8

     8. பொ-ரை: கரையை வந்தடைகின்ற கடலலைகள் சுரி
சங்குகளை வீச, தேன் துளிக்கும் நறுமணமுடைய புன்னை மரங்கள்
நிறைந்த சோலைகள் நிழலைத்தரத் திருவேட்டக்குடி என்னும்
திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமான் இலங்கை
வேந்தனான இராவணனின் தலைகள் பத்தும் இருபது தோள்களும்
வலிமை இழக்குமாறு அடர்த்தவர்.

     கு-ரை: துறை - துறையில். உலவு - உலாவுகின்ற. கடல்
ஓதம் -கடல் அலைகள். சுரிசங்கம் - சுரிந்த சங்குகளை. இடறி
- வீச; போய் - (அவை) சென்று. நறையுலவும் - நறுமணம் வீசும்.
பொழில் - சோலையிலுள்ள, புன்னை, (நல் நீழல்கீழ்.) அமரும் -
தங்கும். இறைபயிலும் - (இலங்கைக்கு) அரசனாகப் பொருந்திய
இராவணன். திறல் - வலிமை.