3513. தெண்டிரைசேர் வயலுடுத்த
       திருவேட்டக் குடியாரைத்
தண்டலைசூழ் கலிக்காழித்
     தமிழ்ஞான சம்பந்தன்
ஒண்டமிழ்நூ லிவைபத்து
     முணர்ந்தேத்த வல்லார்போய்
உண்டுடுப்பில் வானவரோ
     டுயர்வானத் திருப்பாரே.           11

     11. பொ-ரை: தெளிந்த நீர் அலைகளையுடைய வயல்கள்
நிறைந்த திருவேட்டக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமானைப் போற்றி, சோலைகள் சூழ்ந்த, திருவிழாக்களின்
ஓசை மிகுந்த சீகாழியில் அவதரித்த தமிழ் ஞானசம்பந்தன்
ஒண்தமிழில் அருளிய இத்திருப்பதிகத்தை நன்கு பொருளுணர்ந்து
ஏத்தியும், ஓதியும் வழிபடுபவர்கள் மானிடர்களைப் போல்
உண்டலும், உடுத்தலும் இல்லாது வேறுபட்ட தன்மையுடைய
தேவர்களை ஒத்து உயர் வானுலகில் இருப்பர்.

     கு-ரை: தண்டலை - சோலை. கலி - ஓசை. உண்டு - அமுத
உண்டியை உண்டு. உடுப்பில் “தோயாப் பூந்துகிலையுடுத்தலால்”
ஐந்தாம் வேற்றுமை உருபு இல் - மூன்றன்பொருளில் வந்தது. இல்
என்பதற்கு இல்லாத எனப்பொருள் கூறி மானிடரைப்போல்
உண்டலும், உடுத்தலும் இல்லாத எனினும் ஆம். வானவரோடு
வானத்திருப்பார்.