3517. அங்கண்மதி கங்கைநதி வெங்கணர
       வங்களெழி றங்குமிதழித்
துங்கமலர் தங்குசடை யங்கிநிக
     ரெங்களிறை தங்குமிடமாம்
வெங்கதிர்வி ளங்குலக மெங்குமெதிர்
     பொங்கெரிபு லன்கள்களைவோர்
வெங்குருவி ளங்கியுமை பங்கர்சர
     ணங்கள்பணி வெங்குருவதே.        4

     4. பொ-ரை: அழகிய சந்திரனும், கங்கை நதியும், கொடிய
பாம்புகளும், அழகிய இதழ்களையுடைய கொன்றை மலரும்
நெருப்புப் போன்ற சடைமுடியில் அணிந்தவர், எங்கள்
இறைவராகிய சிவபெருமான். அப்பெருமான் வீற்றிருந்தருளும்
இடமாவது, சூரியனால் விளங்குகின்ற இவ்வுலகிலுள்ளோர் நல்வழிக்கு
மாறாக மிக வருத்துகின்ற மனம் முதலிய அந்தக் கரணங்களின்
சேட்டையால் வரும் துன்பத்தைக் களைய விரும்புபவர்கள் பணியும்
வெங்குரு ஆகும். அது தேவகுருவாகிய வியாழபகவான் உமை
பங்கராகிய பரமனைப் பணிந்து பேறு பெற்ற தலமாகும்.

     கு-ரை: அங்கண்மதி - அழகிய ஆகாயத்தினிடத்தில் உள்ள
சந்திரனும், வெங்கண் அரவங்கள் - கொடிய பாம்புகளும். எழில்
தங்கும் இதழித் துங்கமலர் - அழகு தங்கிய கொன்றையின்
தூயமலரும். தங்கு சடை - பொருந்திய சடையானது. அங்கி நிகர்
- தீயையொக்கும். எங்கள் இறை - எங்கள் தலைவன். (சினை
வினை. முதலொடு முடிந்தது) வெங்கதிர் - சூரியனால், விளங்கும்
- விளங்குகின்ற. உலகமெங்கும் - உலகில் உள்ள அனைவரும்.
எதிர் - நல்வழிக்குமாறாக. பொங்கு - மிக. எரி - வருத்துகின்ற.
புலன்கள் - மனம் முதலிய அந்தக் கரணங்களின் சேட்டையை.
களைவோர் - நீக்க விரும்புவோர். வெங்குரு - கொடிய தேவ
குருவினால். விளங்கி தமது துயர் களைதற்கிடமிதுவே யென்று
தெளிந்து. உமைபங்கர் - சிவபெருமானின் - சரணங்கள் பணி -
பாதங்களைப் பணிந்த வெங்குரு அது. வெங்குரு என்னும்
அத்தலமாம்.