3518. |
ஆணியல்பு காணவன வாணவியல் |
|
பேணியெதிர்
பாணமழைசேர்
தூணியற நாணியற வேணுசிலை
பேணியற நாணிவிசயன்
பாணியமர் பூணவருண் மாணுபிர
மாணியிட மேணிமுறையிற்
பாணியுல காளமிக வாணின்மலி
தோணிநிகர் தோணிபுரமே. 5 |
5.
பொ-ரை: விசயனுடைய வீரத்தன்மையை உமை காண
வனத்தில் வாழும் வேடன் வடிவம் கொண்டு, அவனுக்கு எதிராகப்
போர் தொடங்கி, அவன் சொரியும் மழைபோன்ற அம்புகளும்,
அவ்வம்புகள் தங்கிய அம்பறாத்துணியும் நீங்கவும், வில்நாண்
அறுபடவும், வளைந்த மூங்கிலால் வடிவமைத்த வில்லைத்
துணித்தவர். அதனால் அர்ச்சுனன் நாணமுற்றுக் கையால் அடித்துச்
செய்யும் மற்போர் செய்யவர, அவனுக்கு அருள்புரிந்தவர்,
பிரமாணமான மறைகட்கு வாச்சியமாக (பொருளாக) உள்ள
சிவபெருமான். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது
காலாந்தரத்தில் பிரளயகால வெள்ளமானது உலகம் முழுவதையும்
மூழ்கச் செய்ய, ஆற்றல் பெருகுமாறு ஊழி வெள்ளத்தில்
தோணிபோல் மிதந்த தோணிபுரம் எனப்படும் திருத்தலமாகும்.
பிரமாணி - பிரமாணமாகிய மறைகட்கு வாச்சியமாக உள்ளவர்.
கு-ரை:
ஆண் இயல்புகாண (விசயனுடைய) வீரத்தன்மையை
உமைகாண. வன வாணஇயல் - வனத்தில் வாழ்பவர்களாகிய
வேடர் வடிவம். பேணி - கொண்டு, எதிர் - அவனுக்கு எதிராக.
(போர் தொடங்கி) பாணமழை - (அவன் சொரியும்) மழைபோன்ற
அம்புகளும். சேர் - அவ்வம்புகள் தங்கிய. தூணி - அம்பறாத்
தூணியும். அற - நீங்கவும். விசயம் - அவ்வர்ச்சுனன். நாணி -
நாணமுற்று. பாணி அமர் பூண - கையால் அடித்துச் செய்யும்
மற்போரைச் செய்ய வர. அருள் மாணு - அவனுக்கு மிகவும் அருள்
புரிந்த, பிரமாணி இடம் - கடவுட்டன்மைக்கு எடுத்துக் காட்டாக
விளங்கும் சிவபெருமானின் இடம். ஏணி முறையில் - மிக்கது என்ற
முறையினால். பாணி - பிரளயகால வெள்ளமானது. உலகு ஆள -
உலகம் முழுதும் மூழ்கச் செய்ய. மிக ஆணின் - அதனின் மிகவும்
பொருந்திய. ஆண்மை வலிமையினால். மலி - சிறந்த. தோணி
நிகர் - அதனைக்கடக்கவல்ல தோணியையொத்த (தோணிபுரம்
ஆம்).
|