3521. |
அறமழிவு பெறவுலகு தெறுபுயவன் |
|
விறலழிய நிறுவிவிரன்மா
மறையினொலி முறைமுரல்செய் பிறையெயிற
னுறவருளு மிறைவனிடமாங் குறைவின்மிக
நிறைதையுழி மறையமரர்
நிறையருள முறையொடுவரும்
புறவனெதிர் நிறைநிலவு பொறையனுடல்
பெறவருளு புறவமதுவே. 8 |
8.
பொ-ரை: தருமம் அழியுமாறு உலகத்தைத் துன்புறுத்திய
புயவலிமையுடைய இராவணனது வலிமை அழியுமாறு தம்
காற்பெருவிரலை ஊன்றி, பின் இராவணன் தவறுணர்ந்து சாமகானம்
பாடிப் போற்ற வளைந்த பற்களையுடைய அந்த இராவணனுக்கு
நீண்ட வாழ்நாளும், ஒளிபொருந்திய வாளும் அருளியவர்
சிவபெருமான். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது,
வேதங்கட்கும், தேவர்கட்கும் ஒத்ததாகிய நீதியை வழங்கும்படி,
முறையிட்டு வந்த புறாவிற்குரியவனாகிய வேடன் எதிரே, புறாவின்
எடைக்குச் சமமாகத் தன் சதையை அறுத்து வைத்தும்
நிரம்பாது தான் துலையேறி எடை சமன்பெறுமாறு செய்த
சிபிச்சக்கரவர்த்தி குறையில்லா உடம்பைப் பெற அருள் புரிந்ததும்,
தான் செய்த பழிபோக புறா உருவில் வந்த தீக்கடவுள் பூசித்ததும்
ஆகிய புறவம் என்னும் திருத்தலமாகும்.
கு-ரை:
அறம் அழிவுபெற - தர்மம் அழியும் படியாக. உலகு
- உலகத்தை, தெறு - அழித்த, புயவன் - தோள்களையுடைய
இராவணனது. விறல்அழிய - வலிமை யொழியும்படி, விரல் நிறுவி
- விரலை அழுத்தி;
(பின்)
மாமறையின் ஒலி - சிறந்த சாமவேத கானத்தை,
முறை - வரிசையாக, முரல் செய் - பாடிய, பிறை எயிறன் -
பிறை போன்ற பற்களையுடைய அவ்விராவணன். உற -
நாளும், வாளும் பெற. அருளும் இறைவன் இடமாம்.
மறைஅமரர்
- வேதங்களுக்கும் தேவர்களுக்கும் ஒத்ததாகிய,
நிறை - நீதியை. அருள - வழங்கும்படி. முறையொடு வரும் -
முறையிட்டு வந்த, புறவன் - புறாவிற்குரியவனாகிய வேடன், எதிர்
- எதிரே, குறைவில் - புறாவின் எடைக்குச் சரியாக இட்ட
மாமிசத்தின் குறைவில். மிக அதிகரிக்க, நிறைதை உழி -
நிறைவுவேண்டியிருந்த பொழுது. நிறை நிலவு - அந்த எடையின்
நிறை சரியாகப் பொருந்த இட்ட. பொறையன் - உடலின் அரிந்த
மாமிசத்தை எடையாக்கினவனாகிய சிபி, உடல்பெற - தன்
உடம்பைப்பெற, அருள் - (அவன் வந்து பணிய) அருள் புரிந்த -
புறவம் அது - புறவம் என்னும் பெயருடைய திருத்தலமாம்.
நிறைதை - நிறைவு. பொறை - பாரம், எடை.
|