3526. வாளவரி கோளபுலி கீளதுரி
       தாளின்மிசை நாளுமகிழ்வர்
ஆளுமவர் வேளநகர் போளயில
     கோளகளி றாளிவரவில்
தோளமரர் தாளமதர் கூளியெழ
     மீளமிளிர் தூளிவளர்பொன்
காளமுகின் மூளுமிருள் கீளவிரி
     தாளகயி லாயமலையே.              1

     1. பொ-ரை: சிவபெருமான் ஒளிபொருந்திய வரிகளையுடைய
புலியின் தோலை உடுத்தவர். அது பாதத்தில் பொருந்த
எக்காலத்திலும் ஆனந்தமாய் இருப்பவர். அடியவர்களை
ஆட்கொள்பவர். எதிரிட்ட விலங்குகளைக் கிழிக்கும் கூரிய
பற்களை யுடைய திரண்ட வடிவுடைய யானையை
அடக்கியாண்டவர். சிறந்த வில்லினை ஏந்திய தோளர். கூளிகள்
தாளமிட நடனம் புரிபவர். திருவெண்ணீற்றினை அணிந்தவர்.
அப்பெருமான் வீற்றிருந்தருளும் கயிலாய மலையானது கரிய
மேகங்களால் மூண்ட இருட்டை ஓட்டும் வெண்பொன்னாகிய
ஒளியை விரிக்கும் அடிவாரம் உடையதாகும்.

     கு-ரை: வாள - ஒளி பொருந்திய. வரி - கீற்றுக்களையுடைய.
கோள - கொலைபுரிவதாகிய. புலி - புலியை. கீளது - கிழித்ததாகிய.
உரி - தோல் (உடுப்பதால்) தாளின் மிசை - (அது) பாதத்தில்
பொருந்த. நாளும் மகிழ்வர் - என்றும் மகிழ்வர். வேள் - கண்டவர்
விரும்பும். அநகர் - தூயோர். ஆளுமவர் - ஆள்பவர். போள் -
(எதிரிட்ட விலங்குகளை) கிழிக்கும்படியான. அயில - கூடிய
பற்களையுடைய. கோள -திரண்டவடிவையுடையதான. களிறு -
யானையை. ஆளி - அடக்கியாண்டவர். வர வில் - சிறந்த
வில்லைத் தாங்கிய. தோள் - தோளையுடைய. அமரர் -தேவராவர்.
மதர் - செருக்கிய. கூளி - கூளிகள். தாளம் எழ - தாளத்தை
எழுப்ப. மீளி-(நடனமாடும்) வலியர். மிளிர் - பிரகாசிக்கின்ற.
தூளி-திருநீற்றைப் பூசியவர். காளமுகில்-கரிய மேகங்களாய்.
மூளும்-மூண்ட. இருள்-இருட்டை. கீள - ஓட்ட. பொன் - வெண்
பொன்னாகிய. விரி - ஒளியை விரிக்கும். தாள - அடிவரையை
யுடைய கயிலாயமலை.போழ் - போள் என எதுகை நோக்கி
நின்றது.