| 
         
          | 3528. | சிங்கவரை மங்கையர்க டங்களன |   
          |  | செங்கைநிறை 
            கொங்குமலர் தூய் எங்கள் வினை சங்கையவை யிங்ககல
 வங்கமொழி யெங்குமுளவாய்த்
 திங்களிரு ணொங்கவொளி விங்கிமிளிர்
 தொங்கலொடு தங்கவயலே
 கங்கையொடு பொங்குசடை யெங்களிறை
 தங்குகயி லாயமலையே.                 3
 |  
            3. 
        பொ-ரை: சிங்கங்கள் வாழ்கின்ற மலைகளிலுள்ள வித்தியாதர மகளிர் தங்கள் சிவந்த கைகளால் தேந்துளிக்கும்,
 நறுமணம் கமழும் மலர்களைத் தூவிப் போற்றி. எங்கள்
 வினைகளும், துன்பங்களும் அகலுமாறு அருள்புரிவீராக என்று
 அங்கமாய் மொழியும் தோத்திரங்கள் எங்கும் ஒலிக்க,
 சந்திரனிடத்துள்ள குறையைப் போக்கி ஒளிமிகும்படி செய்து,
 மாலையோடு பக்கத்திலே கங்கையையும் மிகுந்த சடையிலே
 தாங்கி எங்கள் இறைவனான சிவபெருமான் வீற்றிருந்தருளுவது
 திருக்கயிலாய மலையாகும்.
       கு-ரை: 
        சிங்கம் - சிங்கங்களையுடைய. வரை - மலையில் வாழும், மங்கையர்கள் - வித்தியாதர மகளிர் முதலியோர்.
 தங்களன -தங்களுடைய, செங்கை-சிவந்த கைகளில், நிறை -
 நிறைந்த, கொங்குமலர் - வாசனை பொருந்திய. மலர்களை. தூய்
 - தூவி, எங்கள் வினை - எங்கள் வினைகளும். சங்கையவை -
 துன்பங்களும். இங்கு அகல - இங்கு விலகுவது ஆக என்று,
 அங்கம் - அங்கமாக, மொழி - மொழியும் தோத்திரங்கள்.
 எங்கும் உள ஆய் -எல்லாப் பக்கங்களிலும் உள ஆகி. திங்கள் -
 சந்திரன், இருள் நொங்க - இருள் கெட, ஒளி வீங்கி - ஒளி
 மிகுந்து, மிளிர் - விளங்குகின்ற, தொங்கலொடு - மாலையோடு,
 தங்க - தங்கவும், அயலே - பக்கத்தில், கங்கையோடு-கங்கா
 நதியோடு, பொங்கும்-மிகுந்த, சடை-சடையையுடைய,
 எங்கள் இறை-எங்கள் தலைவன், தங்கும்-தங்கும் கயிலாயமலை,
 விங்கி-குறுக்கல்விகாரம்.
 |