3535. அண்டர்தொழு சண்டி பணி கண்டடிமை
       கொண்டவிறை துண்டமதியோ
டிண்டைபுனை வுண்டசடை முண்டதர
     சண்டவிருள் கண்டரிடமாம்
குண்டமண வண்டரவர் மண்டைகையி
     லுண்டுளறி மிண்டுசமயம்
கண்டவர்கள் கொண்டவர்கள் பண்டுமறி
     யாதகயி லாயமலையே.              10

     10. பொ-ரை: தேவர்களும் தொழுது போற்றும் சண்டேசுவர
நாயனாரின் சிவவழிபாட்டைக் கண்டு மகிழ்ந்து ஆட்கொண்டவர்
சிவபெருமான். பிறைச்சந்திரனை இண்டைமாலையால்
அலங்கரிக்கப்பட்ட சடைமுடியில் தரித்தும், மண்டையோட்டை
மாலையாக அணிந்தும், கடிய இருள் போன்ற கழுத்தையுடைய
சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், குண்டான சமணர்களும்,
கையிலேந்திய மண்டையில் உணவு உண்டு திரியும் புத்தர்களும்,
அச் சமயங்களைக் கண்டவர்களும், அநுட்டிப்போர்களும் முன்பு
அறியாத திருக்கயிலாய மலையாகும்.

     கு-ரை: அண்டர் தொழு - தேவர்கள் வணங்கக் கூடிய,
சண்டி -சண்டேசுவர நாயனாரின், பணி கண்டு - வழிபாட்டைக்
கண்டு, அடிமை கொண்ட - ஆட்கொண்ட, இறை - கடவுளும்,
துண்டம் - துண்டாகிய, மதியோடு - பிறைச் சந்திரனோடு,
இண்டை-இண்டைமாலையால். புனைவு உண்ட - அலங்கரிக்கப்பட்ட.
சடை - சடையினிடத்தில், முண்டதர - நகுவெண்டலையைத்
தரித்தருளியவரும், சண்ட இருள் - கடிய இருள் போன்ற, கண்டர்
-கழுத்தையுடையவரும், ஆகிய சிவபெருமானின் இடமாம். குண்டு
அமணவண்டர் அவர் - மூர்க்கத்தனத்தையுடைய சமணர்களாகிய
கீழ் மக்களும், மண்டைகையில் உண்டு - கையில் ஏந்திய
மண்டையில் உணவு உண்டு, உளறி - உளறித்திரிந்து, மிண்டு -
ஏமாற்றுகின்ற, சமயம் - சமயங்களை, கண்டவர்கள் -
அறிந்தவர்களும், கொண்டவர்கள் - அநுட்டிப்போரும், பண்டும்
அறியாத -அக்காலத்திலும் அறியாத கயிலாயமலையே.