3536. அந்தண்வரை வந்தபுன றந்ததிரை
       சந்தனமொ டுந்தியகிலும்
கந்தமலர் கொந்தினொடு மந்திபல
     சிந்துகயி லாயமலைமேல்
எந்தையடி வந்தணுகு சந்தமொடு
     செந்தமிழி சைந்தபுகலிப்
பந்தனுரை சிந்தைசெய வந்தவினை
     நைந்துபர லோகமெளிதே.     11

     11. பொ-ரை: அழகிய, குளிர்ச்சி பொருந்திய மலையிலிருந்து
விழும் நீரின் அலைகள் சந்தனம், அகில் இவற்றை உந்தித் தள்ள,
நறுமணம் கமழும் மலர்க் கொத்துக்களோடு குரங்குக் கூட்டங்கள்
சிதறும் திருக்கயிலாயமலையில் வீற்றிருந்தருளும் சிவபெருமானின்
திருவடிகளைப் போற்றி, சந்த இசையோடு செந்தமிழில் திருப்
புகலியில் அவதரித்து திருஞானசம்பந்தர் அருளிச்செய்த இத்திருப்
பதிகத்தை மனத்தால் சிந்தித்து, வாயால் ஓத வினையாவும் நலியப்
பரலோகம் எளிதில் பெறக்கூடும்.

     கு-ரை: அம் தண் - அழகிய குளிர்ந்த, வரை வந்த புனல்
தந்த -மலையில் வரும் அருவிகளில் உண்டாகிய, திரை -
அலைகள், சந்தனமொடு -சந்தனக் கட்டைகளோடு, உந்தி - தள்ளிக்
கொண்டு வந்து, அகில் - அகில் கட்டைகளும், கந்த மலர் -
வாசனை பொருந்திய மலர்களின், கொந்தினொடு - கொத்தோடும்,
மந்தி பல - பல குரங்கின் கூட்டங்கள், சிந்து - சிதறும்; கைலாய
மலையின்மேல். எந்தையடி - எமது தந்தையாகிய சிவபெருமானின்
திருவடியை, வந்து அணுகும் - வந்து சேர்ந்த; சந்தமொடு - வழி
மொழித் திருவிராகமாகிய சந்த இசையோடு, (செந்தமிழ் இசைத்த);
புகலி - சீர்காழியில் அவதரித்த, பந்தன் உரை
-திருஞானசம்பந்தமூர்த்திகள் அருளிச் செய்த இப்பாடல்களை,
சிந்தை செய -தியானிக்க, வந்த வினை - துன்புறுத்த வந்த
பிணிகள், நைந்து - கெட்டு, (அதனால்) பரலோகம் எளிது -
பரலோகம் எளிதில் பெறக்கூடியதாகும்.