3537. வானவர்கள் தானவர்கள் வாதைபட
       வந்ததொரு மாகடல்விடம்
தானமுது செய்தருள் புரிந்தசிவன்
     மேவுமலை தன்னைவினவில்
ஏனமிள மானினொடு கிள்ளைதினை
     கொள்ளவெழி லார்கவணினால்
கானவர்த மாமகளிர் கனகமணி
     விலகுகா ளத்திமலையே.              1

     1. பொ-ரை: தேவர்களும், அசுரர்களும் வருந்தித்
துன்புறுமாறு பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய ஆலகால
விடத்தை, தான் அமுது போன்று உண்டு அருள் செய்த
சிவபெருமான் வீற்றிருந்தருளும் மலை எது என வினவினால்,
பன்றிகள், இளமான்கள், கிளிகள் இவை தினைகளைக்கவர
வேட்டுவ மகளிர்கள் பொன்னாலும், இரத்தினங்களாலும் ஆகிய
ஆபரணங்களைக் கவண்கற்களாக வீசி விரட்டும் சிறப்புடைய
திருக்காளத்திமலையாகும்.

     கு-ரை: விடம் - ஆலகால விடத்தை. தான் அமுது செய்து
- தாம் உண்டு. அருள் புரிந்த - அவர்களுக்கு அருளின. ஏனம் -
பன்றிகள். இளம் மானினொடு - இளமான்களொடு. கிள்ளை -
கிளிகளும். தினை கொள்ள -தினைகளைக் கவர. எழில் ஆர் -
அழகு பொருந்திய. கவணினால் - கவணால். கானவர்தம் மாமகளிர்
வேடுவர்களுடைய சிறந்த பெண்கள்; வீசியெறிகின்ற. கனகம் -
பொன்னாலும். மணி - இரத்தினங்களாலும். விலகு - அவை
விலகுதற்கிடமாகிய (காளத்தி மலை).