| 3540. |
வேயனைய தோளுமையொர் பாகமது |
| |
வாகவிடை
யேறிசடைமேல்
தூயமதி சூடிசுடு காடினட
மாடிமலை தன்னைவினவில்
வாய்கலச மாகவழி பாடுசெய்யும்
வேடன்மல ராகுநயனம்
காய்கணை யினாலிடந் தீசனடி
கூடுகா ளத்திமலையே. 4 |
4.
பொ-ரை: மூங்கிலைப் போன்ற தோளுடைய
உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு, இடப
வாகனத்தில் ஏறி, சடைமுடியில் தூயசந்திரனைச் சூடி,சுடுகாட்டில்
நடனம் ஆடும் சிவபெருமான் வீற்றிருந்தருளும் மலை, வாயே
அபிடேக கலசமாக வழிபாடு செய்த வேடராகிய கண்ணப்பர், தம்
மலர்போன்ற கண்ணைக் கொடிய அம்பினால் தோண்டி
இறைவனுக்கு அப்பி, இறைவனின் திருவடியைச் சார்ந்த சிறப்புடைய
திருக்காளத்தி மலையாகும்.
கு-ரை:
வேய் அனைய - மூங்கிலையொத்த.(தோள்). விடை
ஏறி -விடையை ஊர்தியாக உடையவன். தூய - வெண்மையான.
மதிசூடி - சந்திரனை அணிந்தவன்; (சுடுகாட்டில் நடனமாடி). வாய்
கலசமாக - வாயே அபிடேக கலசமாக. வழிபாடு செய்யும் - பூசித்த.
வேடன் - கண்ணப்ப நாயனார். மலராகும் நயனம் - மலர் போன்ற
கண்ணை. காய் கணையினால் -கோபிக்கின்ற அம்பினால். இடந்து
- தோண்டி. ஈசன் அடி கூடும் - சிவபிரானின் திருவடி சேர்ந்த;
காளத்தி மலை. காய் கணை - வினைத்தொகை.
|