3544. எரியனைய சுரிமயி ரிராவணனை
       யீடழிய எழில்கொள்விரலால்
பெரியவரை யூன்றியருள் செய்தசிவன்
     மேவுமலை பெற்றிவினவில்
வரியசிலை வேடுவர்க ளாடவர்க
     ணீடுவரை யூடுவரலால்
கரியினொடு வரியுழுவை யரியினமும்
     வெருவுகா ளத்திமலையே.             8

     8. பொ-ரை: நெருப்புப்போல் சிவந்த சுருண்ட
முடிகளையுடைய இராவணனின் வலிமை அழியுமாறு, தன் அழிகிய
காற்பெருவிரலை ஊன்றிப் பெரிய கயிலைமலையின் கீழ் அவனை
அழுத்தி, பின் அருள்செய்த சிவபெருமான் வீற்றிருந்தருளும் மலை,
நீண்ட வில்லேந்திய வேடர்கள் நெடிய மலையினூடே வருவதால்,
யானைகளும், வரிகளையுடைய புலிகளும், சிங்கக் கூட்டங்களும்
அஞ்சுகின்ற திருக்காளத்திமலையாகும்.

     கு-ரை: சுரி - சுரிந்த, எரி அனைய மயிர் - அக்கினியைப்
போன்ற செம்பட்டை மயிர்களையுடைய (இராவணனை-வலிமை
அழியும்படி). பெரிய வரை ஊன்றி - பெரிய மலையின் அடியில்
அழுத்தி, அருள் செய்த சிவன் -மீண்டும் அவனுக்கே அருள்
செய்த சிவன்(மேவும்). மலை - மலையையும், பெற்றி - அதன்
சிறப்பையும் வினவின் - வினவினால்(முறையே) வரிய - நெடிய,
சிலை - வில்லையேந்திய, வேடுவர்கள் ஆடவர்கள் - வேட்டுவ
ஆண் மக்கள், நீடு வரை யூடு - நெடிய மலையின் வழியாக,
வரலால் -வருவதால், வரி - கீற்றுக்களையுடைய, உழுவையும் -
புலியும், அரியினமும் -சிங்கக் கூட்டமும் (யானைகளோடு) வெருவு
- அஞ்சுகின்ற காளத்திமலை. மலை, பெற்றி - எதிர் நிரனிறை.
பெற்றி, “கரியினொடு வெருவு” என்பதனாலும், மலை -
காளத்திமலை என்பதனாலும் கொள்க.