3545. |
இனதளவி லிவனதடி யிணையுமுடி |
|
யறிதுமென
விகலுமிருவர்
தனதுருவ மறிவரிய சகலசிவன்
மேவுமலை தன்னை வினவில்
புனவர்புன மயிலனைய மாதரொடு
மைந்தரு மணம்புணருநாள்
கனகமென மலர்களணி வேங்கைக
ணிலாவுகா ளத்திமலையே. 9 |
9.
பொ-ரை: குறிப்பிட்ட இந்தக் கால எல்லைக்குள்
இவன் திருவடியும், திருமுடியும் அறியவேண்டும் என்று தமக்குள்
மாறுபட்ட திருமாலும், பிரமனும் முனைந்து தேடியும் அறிவதற்கு
அரியவனாய் விளங்கியவன் சிவபெருமான். அப்பெருமான்
வீற்றிருக்கும் மலை, தினைப்புனத்திலுள்ள வேடுவர்கள் மயிலொத்த
சாயலுடைய பெண்களை மைந்தர்களுக்கு மணம் செய்விக்கும்
நாளில் பொன் போன்ற மலர்களைப் பூத்து அழகிய வேங்கைகள்
விளங்கும் திருக்காளத்திமலையாகும்.
கு
- ரை: இ(ன்)னது அளவில் - குறிப்பிட்ட இந்தக் கால
எல்லைக்குள். (இவனது அடியும் முடியும்) அறிதும் - அறிவோம்,
இகலும் - மாறுபட்ட. சகள சிவன் - திருவுருவுடைய சிவன், புனவர்
- தினைப்புனத்திலுள்ளவர்களாகிய வேடுவர்கள், மயில் அனைய -
மயிலையொத்த. மாதருடன் - பெண்களோடு, மைந்தரும், ஆடவரும்,
மணம் புணரும் நாள் - மணம் புணர்விக்கும் நாளில். அணி
வேங்கை - வேங்கை மரங்களின் வரிசை. கனகம் என -
தங்கத்தைப் போல, மலர்கள் - பூக்களால், நிலாவு - விளங்குகின்ற
காளத்திமலை. வேங்கை பூத்தலால் மணம் செய்காலம் இதுவென
உணரும் மரபு கூறியவாறு. இறைவன் வடிவம் சகளம், நிஷ்களம்,
சகள நிஷ்களம் என மூன்று. சகளம் - மான், மழு,
சதுர்ப்புசம்,சந்திரசூடம் முதலிய உருவத்தோற்றம். நிஷ்களம் -
அருவத்தோற்றம். சகள நிஷ்களம் - உரு அருவத்தோற்றம் -
சிவலிங்க வடிவம்.
|