3547. காடதிட மாகநட மாடுசிவன்
       மேவுகா ளத்திமலையை
மாடமொடு மாளிகைக ணீடுவளர்
     கொச்சைவய மன்னுதலைவன்
நாடுபல நீடுபுகழ் ஞானசம்
     பந்தனுரை நல்லதமிழின்
பாடலொடு பாடுமிசை வல்லவர்க
     ணல்லர்பர லோகமெளிதே.         11

     11. பொ-ரை:சுடுகாட்டை அரங்காகக் கொண்டு ஆடுகின்ற
சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற காளத்திமலையைப் போற்றி,
மாடமாளிகைகள் நீண்டு ஓங்கி வளர்ந்தள்ள கொச்சைவயம் என்னும்
சீகாழியின் நிலைபெற்ற தலைவனும், பலநாடுகளிலும் பரவிய
புகழையுடையவனுமாகிய ஞானசம்பந்தன் நல்ல தமிழில் அருளிய
இப்பாடல்களை இசையுடன் ஓத வல்லவர்கள் சிறந்தவர்களாவர்.
அவர்கள் சிவலோகம் அடைதல் எளிதாகும்.

     கு-ரை: காடு (அது) மயானம், இடமாக - அரங்காக, நடம்
ஆடு - கூத்தாடுகின்ற சிவன், நீடுவளர் - மிக உயர்ந்த: கொச்சை
வயம் - சீகாழியில், மன்னு - நிலைபெற்ற தலைவனாகிய: நாடுபல
- பல நாடுகளிலும், நீடு புகழ் - சென்று பரவிய, புகழையுடைய,
(ஞான சம்பந்தன்) உரை - பாடிய. பாடலொடு பாடும் இசை -
பாடலொடு இசைத்தப் பாடும் இசையில் வல்லவர்கள். நல்லர் -
சிறந்தவர்கள் ஆவார்கள்.(அவர்களுக்கு) பரலோகம் - சிவலோகம்.
எளிது - அடைவதற்கு எளிதாகும். பிறர் அடைவதற்கு
அரியதாயினும் என்பது இசையெச்சம்.