3548. ஏனவெயி றாடரவொ டென்புவரி
       யாமையிவை பூண்டிளைஞராய்க்
கானவரி நீடுழுவை யதளுடைய
     படர்சடையர் காணியெனலாம்
ஆனபுகழ் வேதியர்க ளாகுதியின்
     மீதுபுகை போகியழகார்
வானமுறு சோலைமிசை மாசுபட
     மூசுமயி லாடுதுறையே.     1

     1.பொ - ரை: சிவபெருமான் பன்றியின் கொம்பும்,
படமெடுத்து ஆடும் பாம்பும், எலும்பும், வரிகளையுடைய
ஆமையோடும் அணிந்து, இளைஞராய், காட்டில் வாழும்,
வரிகளையுடைய புலித் தோலை ஆடையாக உடுத்தவர், படர்ந்து
விரிந்த சடையுடைய அச்சிவ பெருமானைக் கண்டு தரிசிப்பதற்குரிய
இடம், புகழ்மிக்க அந்தணர்கள் வளர்க்கும் வேள்வியிலிருந்து
எழும்புகை, அழகிய தேவலோகத்திலுள்ள கற்பகச்சோலை மீது
அழுக்குப்படப் படியும் திருமயிலாடு துறை என்னும் திருத்தலமாகும்.

     கு-ரை: ஏன எயிறு - பன்றியின் கொம்பும். வரி -
வரிகளையுடைய. ஆமை- ஆமையோடும். இவை - (ஆகிய)
இவற்றை. பூண்டு - அணிந்து. இறைஞராய் - வாலிபராகி.
(சதாசிவமூர்த்தத் தியானம் பதினாறு வயதினராகப் பாவிக்கச்
சொல்வது காண்க.) கானம் - காட்டில் வாழும். வரி -
கீற்றுக்களையுடைய. நீடு - நெடிய. உழுவை அதள் - புலித்தோலை.
உடைய - ஆடையாக உடைய. படர் சடையர் - படர்ந்த சடையை
உடையவராகிய சிவபெருமானது. காணி - உரிய இடம் எனலாம்.
ஆனபுகழ் - சிறந்த புகழையுடைய. வேதியர்கள்(செய்யும்)
ஆகுதியின் மீது - வேள்வியில் (கிளம்பும்) புகை - புகையானது.
போகி - மேற்சென்று. அழகார் - அழகு மிகுந்த. வானம் உறு -
தேவலோகத்தில் உள்ள. சோலைமிசை - கற்பகச் சோலையின் மீது.
மாசுபட - அழுக்கு உண்டாக. மூசு - மூடுகின்ற மயிலாடுதுறை.