| 
         
          | 3552. | பூவிரி கதுப்பின்மட மங்கையர |   
          |  | கந்தொறு 
            நடந்துபலிதேர் பாவிரி யிசைக்குரிய பாடல்பயி
 லும்பரமர் பழமையெனலாம்
 காவிரி நுரைத்திரு கரைக்குமணி
 சிந்தவரி வண்டுகவர
 மாவிரி மதுக்கிழிய மந்திகுதி
 கொள்ளுமயி லாடுதுறையே.           5
 |  
             5. 
        பொ-ரை: மலர்ந்த பூக்களைக் கூந்தலில் சூடியுள்ள, தாருகாவனத்து முனிபத்தினிகளின் இல்லங்கள்தோறும் சென்று
 பிச்சையெடுத்துப் பண்ணோடு கூடிய பாடல்களை இசைக்கும்
 சிவபெருமான் மிகப் பழமையானவர். காவிரியின் அலைகள் இரு
 கரைகளிலுமுள்ள சோலைகளில் இரத்தினங்களைச் சிதற, அதனால்
 அஞ்சி மந்திகள் குதிக்க, மரக்கிளைகளில் மோதி, மாமரத்தில்
 கட்டப்பட்ட தேன்கூடுகள் கிழியத் தேன் சிந்த, அதனை வண்டுகள்
 கவர்ந்துண்ணும் வளமிக்க திருமயிலாடுதுறையில் சிவபெருமான்
 வீற்றிருந்தருளுகின்றார்.
       கு-ரை: 
        பூவிரி - மலர்கள் விரிந்த. கதுப்பின் - கூந்தலையுடைய, மடமங்கையர் - இளம்பெண்கள். அகம்தொறும் நடந்து -
 வீடுதோறும் சென்று, பலிதேர் - பிச்சைஎடுக்கும், பாவிரி - பாக்கள்
 விரிந்த, இசைக்குரிய - இராகத்திற்கு ஏற்ற, பாடலொடுபயிலும் -
 பாடல்களைப் பாடும். பரமர் - சிவபெருமானின். பழமை எனலாம் -
 பழமையாகிய பதி என்று சொல்லலாம். (பழமை - பண்பாகுபெயர்)
 
      காவிரி. 
        நுரைத்து - நுரையையுடையதாகி. இருகரைக்கும் - இருபாலும் உள்ள ஆற்றங்கரைச் சோலைகளில். மணிசிந்த -
 இரத்தினங்களைச் சிதற (அதற்கு அஞ்சி மந்தி குதிகொள்ளும்
 மயிலாடுதுறை). வண்டு கவர - வண்டுகள் கவர்ந்துண்ணுமாறு.
 மா - மரங்களில். விரி - விரிவாகத் தொடுக்கப்பட்ட. மது -
 தேன். இறால் (தேன்கூடு)கள் கிழிய - கிழியும்படி, மந்தி
 குதிகொள்ளும் - குரங்குகள் குதித்துப்பாயும். மயிலாடுதுறை.
 காவிரி மணி சிதற, (அஞ்சி) மந்தி குதிகொள்ள (அதனால்)
 மரக்கிளைகள் மோதி இறால்கிழிய - அதை வண்டுகள்
 கவர்ந்துண்ணும் வளம்மிக்க மயிலாடுதுறை என்க.
 |